காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் நேற்று முன் தினம் நடந்த இந்திய விமானப்படையின் பதிலடி போன்ற நடவடிக்கைகளால் இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்ற சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. எல்லையில் போர் பதற்றம் நிலவி வருவதால், பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா – பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால், மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஷேக் ரஷித் அகமது இது தொடர்பாக மேலும் கூறியவை, பாகிஸ்தான் பெரும்பாலும் போர் சூழலுக்கு வந்துவிட்டது. அவசரகால சட்டங்களை ரெயில்வே துறை ஏற்கனவே பின்பற்ற தொடங்கி விட்டது. போர் நடந்தால் கொடூரமானதாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் முற்றிலும் போருக்கு தயாராகி விட்டது என்று கூறினார்.
இந்தியாவுடன் போர் வந்தால் அது 2-ம் உலகப்போருக்கு பிறகு மிகவும் பெரிய போராக இருக்கும் என்று கூறினார் ஷேக் ரஷித், இந்த போர்தான் இறுதிப்போராகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தியாவுடன் போரா அல்லது அமைதியா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.