கிட்னி பத்திரமாக இருக்கிறதா..? இரத்ததானம் என்ற பெயரில் அரங்கேறும் மோசடி..!

ரத்தம் கொடுக்க சென்றவரின் கிட்னி திருட்டு குறித்து காவல்துறை ஆணையர் தலைமையில் விசாரிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை,ஒத்தக்கடையை சேர்ந்த சகிலாபானு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்த மனுவில் எனது மகன் முகமது பக்ருதீன் , அசாருதீன் என்பவருக்கு ரத்தம் அளிக்க கடந்த அக்டோபர் 17 ல் மதுரை வளர்நகர் பகுதியில் உள்ள சாஸ்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது ரத்தம் அளித்தபோது முகம்மது பக்ருதீனின் ரத்தத்தில் நோய் உள்ளது என கூறியவர்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றனர். இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தோம்.

அப்போது சிகிச்சை என்ற பெயரில் முகமது பக்ருதீனின் ஒரு கிட்னியை திருடியுள்ளனர்.ராஜா முகமது என்பவரிடம் மருத்து வமனை நிர்வாகம் கிட்னியை திருடியது தொடர்பாக கேட்டபோது ராஜா முகம்மதுவின் உறவினர் அசாருதீனுக்கு, திருடிய கிட்னியை பொருத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.

அப்போது ராஜா முகம்மது தரப்பினர் இந்த விசயத்தை பெரிதாக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து எங்களுக்கு பணம் தருவதாக கூறினார்கள். எங்களது வறுமையை பயன்படுத்தி எங்களை மிரட்டினார்கள்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக எனது மகனிடம் இருந்து கிட்னியை திருடிய மருத்துவர் பழனிகுமார் மற்றும் உறவினர் ராஜா முகம்மது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை .எனது மகனின் கிட்னியை திருடிய கொட்டாம்பட்டியை சேர்ந்த பசீர் அகமது , ராஜா முகமது மற்றும் சாஸ்தா மருத்துவமனை மற்றும் இவர்களுக்கு உதவிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி இது தொடர்பாக மதுரை காவல்துறை ஆணையர் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.