ரஷ்ய கார்கோ கப்பலின் கேப்டன் அதிக மது போதையில் இருந்ததால், தென் கொரியாவில் உள்ள பாலம் ஒன்றில் கப்பலை மோதும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் 6000 எடை கொண்ட கார்கோ கப்பல் ஒன்று, தென் கொரியாவின் பூசன் பகுதியில் உள்ள குவாங்கன் பாலத்தில் நேற்று மாலை மோதி நின்றது.
தென் கொரியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய பாலம் இதுவாகும். பாலத்தில் மோதிய அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து கப்பலை நகற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள் அங்கு வந்து சேர்ந்த தென்கொரிய கப்பற்படை அதிகாரிகள் கப்பலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்பொழுது கப்பலின் கேப்டன் சாதாரண அளவை விட மூன்று மடங்கு அதிகம் மது அருந்தியிருப்பது தெரியவந்தது.
கப்பலில் மது அருந்துவது சட்டப்பூர்வமானது என்றாலும் கூட, சம்மந்தப்பட்ட நபர் நீண்ட நேரத்திற்கு கப்பலை கையாள கூடாது. அதேபோல பாலத்தில் விபத்து ஏற்படுத்துவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு மற்றொரு கப்பலின் மீது மோதியதாக தெரியவந்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியின் புகைப்படம் மற்றும் தகவல்களை வெளியிடாத பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பாலத்தின் தரத்தையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.