திபெத்தில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, கனடாவுக்கு குடிபெயர்ந்து கனடா குடிமகளாகியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் குவிகின்றன.
கொலை மிரட்டல் விடுப்பது யார் என்று பார்த்தால் சம்பந்தமே இல்லாத மூன்றாவது நாடு கூட இல்லை, நான்காவது நாடு.
சொந்த நாட்டிலிருந்து ஓடி, நாடற்றவளாக, ஒரு அகதியாக வாழ்ந்திருந்தாலும், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மாணவர் யூனியனின் தலைவராக பொறுப்பேற்கும் வரை செமி லாமோவுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருந்திருக்க முடியாது, என்று அவர் மாணவர் யூனியன் தலைவரானாரோ அன்றிலிருந்து சைபர் தாக்குதலுக்கு உள்ளாகத் தொடங்கினார் லாமோ. தாக்குபவர்கள் சீன மாணவர்கள், தாக்குவதற்குக் காரணம் லாமோ ஒரு திபெத்தியர் என்பது.
லாமோவை யூனியன் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரி அனுப்பப்பட்டுள்ள ஒரு புகார் மனுவில், 11,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அந்த புகார் மனுவையும், சைபர் தாக்குதல்களையும் பார்க்கும்போது கனேடிய பல்கலைக்கழக வளாகத்தினுள் சீன அரசின் தலையீடு இருக்கிறதோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
22 வயதாகும் லாமோ, திபெத் வம்சாவளியினரான ஒரு கனேடிய குடிமகள். இந்தியாவிலிருந்து குடும்பத்துடன் 11 ஆண்டுகளுக்குமுன் கனடாவுக்கு குடி பெயர்ந்தார் அவர்.
லாமோ திபெத் விடுதலைக்காக குரல் கொடுப்பவர் என்பதுதான் இப்போது பிரச்சினை. தனது தற்போதைய பதவிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறினாலும், சீன மாணவர்கள் அவரைப் பார்க்கும் விதம் வேறு மாதிரியாக இருக்கிறது.
லாமோ சீனாவுக்கு துரோகம் செய்வதாக அவர்கள் லாமோ மீது குற்றம் சாட்டுகிறார்கள், லாமோவோ சீனா பக்கம் தலை வைத்து கூட படுத்ததில்லை.
லாமோவை அகற்ற வேண்டும் என்று கூறும் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்ட கிட்டத்தட்ட அனைவருமே சீனப் பெயர் கொண்டவர்கள்.
சீனா திபெத் விடுதலை இயக்கத்தை ஒரு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கும் நிலையில் அதற்கு ஆதரவானவரான் லாமோவையும் எதிரியாகவே பார்க்கிறார்கள் சீன மாணவர்கள். இதன் பின்னணியில் சீன தூதரகத்தின் பங்கும் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் கனடாவிலுள்ள சீன தூதரகம் அதை மறுத்திருக்கிறது.
லாமோவுக்கு வரும் மிரட்டல்கள், நீ இளம் வயதிலேயே செத்துவிட வேண்டும் என விரும்புகிறேன், உன்னைத் தண்டிக்க இருக்கும் துப்பாக்கிக் குண்டு சீனாவில் செய்யப்பட்டது, உன் குடும்பம் முழுவதையும் கொன்று விடுவேன் என்னும் விதத்தில் இருக்கின்றன.
இதற்கிடையில், லாமோவுக்கு பாதுகாப்பளிக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, ஒரு மணி நேரத்திற்கொருமுறை தான் எங்கே இருக்கிறேன் என்பதை பொலிசாரிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக லாமோ தெரிவிக்கிறார்