காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி 2,500 துணை ராணுவ படையினர், 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து பயங்கரவாதி மோத செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 துணை ராணுவ படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. மூன்று நாட்கள் முன்பு சரியாக காலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகளை கொன்று குவித்தது இந்திய விமானப்படை.
இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி. அப்போது அவர் கூறியவை, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார். மசூத் அசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் முடங்கியுள்ளார். மசூத் அசாருக்கு எதிராக ஆதாரங்களை அளித்தால் சட்டத்தின் முன்பு நிறுத்த தயார் என்று கூறினார்.
அதேசமயம் மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் எப்போதுமே தயாராக உள்ளது. அவர்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயவு செய்து வரவேண்டும். பேச்சுவார்த்தைக்கு வந்தால் எங்கள் தரப்பை நாங்கள் தெளிவுபடுத்த முடியும். அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும் எனக் கூறினார்.