இலங்கையின் ஏற்றுமதி வருவாயை 28 பில்லியன் டொலர்களாக அதிகரித்தல், புதிய ஏற்றுமதியாளர்கள் 2000 பேரை உருவாக்குதல் என்பனவற்றை நோக்கமாக கொண்டு ‘ஏற்றுமதியில் முதலிடத்தை பெறுங்கள்’ எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு கருத்தரங்கும், தொழிநுட்ப கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட தொழில் முனைவோருக்கான ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் செயலமர்வு நடைபெற்றுள்ளது.
ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் முதலாவது நிகழ்வானது யாழ். மற்றும் கண்டி, மாத்தறை, குருநாகல், கேகாலை, அனுராதபுரத்திலும் நடைபெற்று ஏழாவது கருத்தமர்வாக வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.
இதில் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, றிசாட்பதியூதீன், நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.