உளுந்து இல்லாமல் சுவையான ஸ்பான்ஞ் தோசை!

உளுந்து இல்லாமலே பஞ்சு போல தோசை என்பதே இதன் சிறப்பு. மோர் மீந்து இருந்தால் புளித்த மோரை வீணாக்காமல் இந்த தோசையை செய்து பார்க்கலாம். வித்தியாசமான சுவையில் ஒரு அசத்தலான தோசை. மங்களூர் நீர் தோசை போன்ற சுவை நிரம்பியது. அசைவகுழம்புகளான சிக்கன், மட்டன் குருமாக்களுடன் உண்பதற்கு தகுந்த தோசை இது.

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி – 2 கப்
  • வெள்ளை அவல் – 1/4 கப்
  • புளிப்பான மோர் – 4 கப்
  • ஆப்ப சோடா  – 1சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • வெண்ணெய் – விருப்பப்பட்டால்

செய்முறை

  • அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும் .
  • இப்பொழுது நன்றாக கழுவிய அரிசி அவல் இரண்டையுமே ஒன்றாக ஒரு பாத்திரத்துல எடுத்து கொள்ள வேண்டும். அதில் புளிப்பான மோரை சேர்த்து  முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
  • காலை டிபன் செய்யும் இரண்டு மணிநேரம் முன் அதை கிரைண்டரில் இட்டு ஆட்ட வேண்டும் .
  • இட்லி / தோசை பதத்தை விட சிறிது தளர்வாக அதாவது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஆட்ட வேண்டும்.
  • அரைத்த மாவுடன் தேவையான அளவிலான உப்பு  மற்றும் ஆப்பசோடாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு  இரும்பு தோசை கல்லை சூடு செய்து அதில் இந்த மாவை கொஞ்சம் ஊத்தப்பம் போல் ஊற்றி கொள்ள வேண்டும்.
  • அதன் ஓரங்களில்  வெண்ணையை தேவையான அளவிலான விட்டு வேகும் சமயத்துல தோசையில் நிறைய சிறிய சிறிய ஓட்டைகள் விழும் வரை தோசையை திருப்பி போடாமல், இரண்டாக மடிக்கவும் கூடாது. அதன் மேல் ஒரு மூடி போட்டு மூடி வேகவைத்து எடுக்கவும்.
  • சைவ பிரியர்கள் இதனை ஏதாவது ஒரு காரசட்னி, மிளகாய் சட்னியுடன் பரிமாறலாம்.