” டை ” இல்லாமல் இளநரை மாறுமா?

கடந்த தலைமுறையினர் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும் அடர்த்தியான கேசத்துடன் வாழ்ந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்களின் உணவுமுறையும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும் தான் முக்கிய காரணம்.

இன்று சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். மோசமான உணவுப் பழக்கத்தால் அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது என இந்திய மருத்துவ முறைகளில் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது.

எண்ணெய் குளியல்

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் வைத்து இயன்றால் மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெயை லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

இளநரை போக்க எண்ணெய்

  • தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 5
  • கறிவேப்பிலை – 2 இணுக்கு
  • நெல்லி வற்றல் – 1 டேபிள்ஸ்பூன்
  • வெட்டிவேர் – 1 கைப்பிடி
  • உலர்ந்த ரோஜா இதழ்கள் 1 கைப்பிடி

தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மெல்லிய தீயில் வைக்கவும்.

மேலே குறிப்பிட்ட பொருட்களை எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

வெறும் மூலிகை எண்ணெய் மட்டும் அல்லாமல் உணவோடு கூடிய மாற்றம் தான் நிரந்தரமாக வெள்ளை முடி நீங்க உதவும்.