ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால் திருமணமான 4 நாளில் கர்நாடக விமானப்படை வீரர் பணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு வீர திலகமிட்டு அவருடைய மனைவி வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் மலிகாவாட் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் சுதார். ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி சுனிதா.
இந்த தம்பதியின் மகன் ராஜேந்திர சுதார். இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் மாதூரி என்பவருக்கும் கடந்த மாதம் 24-ந் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் திருமணத்துக்கு ராஜேந்திர சுதார், ஒரு மாதம் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து கடந்த மாதம் 24-ந் திகதி ராஜேந்திர சுதார்-மாதூரி ஆகியோரின் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால் உடனடியாக பணிக்கு திரும்பும்படி விமானப்படை அவருக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, உடனடியாக ராஜேந்திர சுதார் பணிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக, ராஜேந்திர சுதாருக்கு அவருடைய மனைவி மாதூரி, தாய் சுனிதா ஆகியோர் ஆரத்தி எடுத்து நெற்றியில் வீர திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர்.
இதுபற்றி ராஜேந்திர சுதாரின் தந்தை ஸ்ரீகாந்த் சுதார் கூறுகையில், நான் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தாய்நாட்டை காப்பது தான் முதல் கடமையாகும். எனது மகனை அதற்காக அனுப்பி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.