கையில் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்!

திருப்பூரில் 24 மணி நேரமும் நடக்கும் மது விற்பனைக்கு எதிராக, இளம்பெண் ஒருவர் கையில் கத்தியுடன் ‘டாஸ்மாக்’ மதுபானசாலை  முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை , 24 மணி நேரமும் தாராளமாக மது விற்பனை நடக்கிறது. இதனால், ஏராளமான குடிமகன்கள் வேலைகளுக்குச் செல்லாமல், அதிகாலையிலேயே மதுபானசாலைக்கு படையெடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

இதனால், அவர்களின் குடும்பங்களில் தினமும் சண்டை, சச்சரவு மற்றும் அடிதடிகளுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், “பொறுத்தது போதும். பொங்கி எழு” என்ற பாணியில், கையில் கத்தியுடன் நேற்று நடத்திய போராட்டம்  பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி, அப்பகுதி டாஸ்மாக்  மதுபான நிலையம் 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்தார். இதையடுத்து நேற்றய தினம் அந்த டாஸ்மாக் மதுபானசலை முன்பு கையில் இரண்டு கத்திகளுடன் அமர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, ‘யாரும் குடிக்கச் செல்லாதீர்கள்; மீறி யாராவது போனால் குத்திவிடுவேன்.அல்லது என்னை நானே குத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வேன்’ என கூச்சலிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் மதுபானசாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான மது போத்தல்களை பறிமுதல் செய்ததுடன், போராட்டம் நடத்திய யுவதியயும் விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

இதுகுறித்து கவிதா கூறியதாவது,

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதியம் 12 மணிக்கு தான் மதுக்கடையை திறக்க வேண்டும். ஆனால், இங்குள்ள பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. என் கணவர் காலையிலேயே குடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே படுத்துக்கொள்கிறார்.

போதிய வருமானம் இல்லாததால், குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. இதுகுறித்து பொலிஸாரிடம் பலமுறை சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. என்னைப்போல் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக தலையிட்டு, 24 மணி நேர மது விற்பனையை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.