கொடூர கொலைக் குற்றவாளி…மரணத்திலிருந்து விடுவித்த கவிதை!

குழந்தையை கடத்தி கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்த நிலையில் அவர் எழுதிய கவிதைகளால் அவரது தண்டனை குறைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியானேஸ்வர் சுரேஷ் போர்கார் என்பவர் ஒரு குழந்தையை கடத்தி கொலை செய்ததாக 2006 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இதனால் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிறையில் இருந்த காலகட்டத்தில் தாம் கல்வி பயின்று மனம் திருந்தியிருப்பதாகவும், வெளியுலகத்தில் சாமானிய மனிதராக வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைதொடர்ந்து தியானேஸ்வர் சிறையில் இயற்றிய கவிதைகளை அந்த மனுவுடன் இணைத்திருந்தார்.

இந்த சூழலில் அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தியானேஸ்வரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் மனம் திருந்தியிருப்பதாகவும், அதற்கு அவரது கவிதைகளே சாட்சி என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கை அரிதிலும் அரிதான‌ வழக்காகக் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.