பாகிஸ்தானில் இருந்து விடுதலையான விங் கமாண்டர் அபிநந்தன் உடலில் சிப் பொறுத்தப்பட்டதா என்கிற சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அட்டாரி- வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு காண்டோன்மெண்ட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு உடல், மற்றும் மனரீதியாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக அவரது உடலில் பாகிஸ்தான் ராணுவம் சிப் பொறுத்தியதா என்கிற சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், அவரது உடலில் சிப் பொறுத்தப்படவில்லை என ஸ்கேன் ரிப்போர்ட் உறுதிப்படுத்தி உள்ளது.
அவர் விமானத்தில் இருந்து குதித்த போது கீழே விழுகையில் அவருக்கு கீழ் தண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அவரது உடலில் கருவிகள் ஏதும் பொறுத்தப்படவில்லை என தெரிய வந்தாலும் பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அத்துடன் அடுத்த கட்டமாக போர் விமானத்தை இயக்கும் அளவுக்கு உடல்நிலை, மனநிலையில் அபிநந்தன் இருக்கிறாரா என்கிற சோதனைகளுக்கும் அவர் உட்படுத்தப்பட இருக்கிறார்.
இதுகுறித்த சோதனைகள் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோ ஸ்பேஸ் மெடிசன் அமைப்பில் நடத்தப்பட உள்ளது.
ஏற்கெனவே இந்த அமைப்பு மூலம் சான்றிதழ் பெற்றுள்ள அபிநந்தன் மீண்டும் போர் விமானங்களை இயக்க இந்த அமைப்பிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
போர் விமானங்களை இயக்க ஏ1ஜி1 சான்றிதழ் பெற்றால் மட்டுமே விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவார்.
தற்போதைய நிலையில் அபிநந்தன் அந்த சான்றிதழை பெற சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். இதில் அவர் தேறினால் மட்டுமே போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்.