மது விற்பனை… விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று, தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனையை 2 மணி நேரம் குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும், மதுக்கடைகளின் திறக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்ததை, மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை என நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

ஆனால் மதுக்கடைகள் குறைந்தாலும், மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைத்தால் என்ன என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதையடுத்து, அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்றதை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் மதுக் கடைகள் 2 மணிநேரம் குறைக்கப்பட்டு மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு வௌியாகும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.