காங்கிரசின் முன்னாள் முதல் மந்திரியும், கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும் ஆன சித்தராமையா மற்றும் முதல் மந்திரி குமாரசாமி ஆகியோர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயன்று வருவதாக குற்றம் சுமத்தி வந்த நிலையில், பாஜகவின் எடியூரப்பவும், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ நாகன கவுடாவின் மகனும் உரையாடும் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து எடியூரப்பா அளித்த பேட்டியில், நாகன கவுடாவின் மகனுடன் பேசிய ஆடியோவில் இருப்பது தனது குரலில்லை என்றும் இதனை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்றும் எடியூரப்பா உறுதி அளித்தார்.
பின்னர், அந்தர் பல்டி அடித்து, அந்த ஆடியோவில் இடம் பெற்றிருப்பது என் குரல் தான் என்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார் எடியூரப்பா. மேலும், தான் பேசிய மொத்த உரையாடலில் தேவைக்கு ஏற்றாற்போல முதல்வர் குமாரசாமி எடிட் செய்து வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் உமேஷ் ஜாதவ் அளித்து உள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.