பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு.!

காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது. இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படையை இந்திய விமானப்படையினா் பதிலடி கொடுத்து விரட்டியடித்தனா். இந்த தாக்குதலின் போது ஏற்பட்ட விபத்தினால் பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானி அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரை மீட்க இந்தியா உட்பட பல நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். அதன்படி இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இம்ரான்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. மேலும், இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நோபல் அமைதி பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சினை தீர்த்து வைக்கும், துணைநாட்டில் சமாதானம் மற்றும் மனித குல வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருவரே அதற்கு தகுதி பெற்றவர் என கூறியுள்ளார்.