வரும் 17 வது மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்தியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீடு நடந்துமுடிந்துள்ளது.
இந்நிலையில், இன்று அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தொகுதிப் பங்கீட்டில் உடன்படிக்கை ஏற்படாமல் நாளை வரை நேரம் கொடுத்துவிட்டு பூப்பட்டார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், ”திமுக கூட்டணியில் மதிமுக வுக்கு தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாளை மாலை 4 மணிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், உடனடியாக நாளை காலை 11 மணியளவில் மதிமுகவின் உயர்மட்ட குழு கூடுவதாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான பாலகிருஷ்ணன் அறிவாலயத்தில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”திமுகவுடன் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மதிமுகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கேட்ட தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் தான் இந்த இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மதிமுக இரண்டு தொகுதிகளுக்கு மேல் கேட்பதாகவு, மார்க்சிஸ்ட் கட்சியும் இரண்டு தொகுதிகளுக்கு மேலாக கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கூட்டணி உடன்படிக்கையின் படி பார்த்தால், மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 17 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக மதிமுகவிற்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகளை பிரித்து கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளாவது அல்லது அதற்கு மேல் தொகுதி வேண்டும் என்று கேட்பதால், என்ன செய்வது அல்லது திமுக போட்டியிடும் தொகுதியில் குறைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வழங்கலாமா, என்ற சிக்கலில் திமுகவின் தலைமை இருப்பதாகவே தெரிகிறது.