இளவரசிகளை ஆபாசமாக விமர்சிக்கும் இணையதளவாசிகள்: அரண்மனை எடுத்த அதிரடி முடிவு

பிரித்தானிய இளவரசிகளை இணையதள பக்கத்தில் ஆபாசமாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அதற்கான புதிய விதிகளையும் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே பிரித்தானிய இளவரசிகள் மேகன் மற்றும் கேட்டை இணையதளவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இருவரின் ரசிகர்களும் சண்டை போடும் விதமாக ஒருவரையொருவர் மாற்றி மாற்றி ஆபாசமாக திட்டிக்கொள்கின்றனர். அரண்மனையின் அதிகாரபூர்வ பக்கத்தில் நடைபெற்று வரும் இது போன்ற தாக்குதல்களை தடுக்க இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

அவர்கள் ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்கள் மற்றும் கருத்துக்களை முடக்கம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அது குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இளவரசிகளுக்கு கொலை மிரட்டல், நிறவெறியுடன் கருத்து பதிவிடுதல் மற்றும் பாலியல் ரீதியாக தாக்குதல் போன்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் அரண்மனை நிர்வாகம் ஒரு புதிய நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் போன்ற ட்விட்டர் கணக்குகளில் தவறாக கருத்து பதிவிடுபவர்களை முடக்கம் செய்வதுடன் பொலிஸாரிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக இன்று அதிகாலை அரண்மனை நிர்வாகம் சில விதிகளை வெளியிட்டுள்ளது. அதில், வேண்டப்படாத கருத்துக்கள், ஒரு தனிநபருக்கு தீங்குவிளைவிப்பதை போன்ற கருத்துக்கள், மற்றவர்களை ஏமாற்றும் நோக்கமுடைய கருத்துக்கள், அசிங்கமான, தாக்கி பேசுதல், அச்சுறுத்தல், தவறான, வெறுக்கத்தக்க, உடல் உறுப்பை குறிப்பது அல்லது வெளிப்படையாக பாலியல் பற்றி பேசுவது அல்லது வன்முறை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது அல்லது இனம், பாலினம், மதம், தேசியவாதம், இயலாமை, பாலியல் சார்பு அல்லது வயது ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை மேம்படுத்தும் கருத்துக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

எந்த ஒரு விளம்பரத்தையும் கமெண்ட் இடத்தில் பதிவிடக்கூடாது. புரிந்துகொள்ள முடியாத அல்லது பொருத்தமற்ற கருத்துக்களை பதிவிடக்கூடாது.

எங்களுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் எந்த ஒரு கருத்தினை நீக்கவோ அல்லது அந்த நபரை முடக்கம் செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.