அமெரிக்காவை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக மாதக்கணக்கில், பாதாள சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ராண்டி ஸ்வப்ஸ் (48) – கேத்ரீன் (49) என்கிற தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 10 வயது குழந்தை மட்டும் பாதாள சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அரிதாகவே வீட்டிற்கு வெளியில் காணப்படுவார் என அண்டை வீட்டை சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதனை சற்றும் எதிர்பாராத ராண்டி, பெரும் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளார்.
சோதனையின் போது பாதாள அறையில் ஒரு சிறுமி மட்டும் ஏறக்குறைய 1 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். அங்கு குளிப்பது போன்ற தேவைகளுக்காக ஒரு சிறிய வாலி மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மழைக்காலங்கள் அந்த பாதாள சிறையில் தண்ணீர் நிரம்பி நிற்கும்.
இதுகுறித்து ராண்டியிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்களுடைய மகளுக்கு பேய் பிடித்திருப்பதால் தான் பாதாள சிறையிலே அடைத்துவைத்தோம் என தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேயை விரட்டுவதற்காக ரத்தை கொடுத்து குடிக்குமாறு சிறுமியை வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமையை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு மற்ற குழந்தைகளை மீட்டு முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சிறுமியை கொடுமை செய்ததன் பேரில் ராண்டி மற்றும் அவருடைய மனைவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 29-ம் திகதிக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், தம்பதியினர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.