செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் இரவு முழுவதும் பிரசவ வலியால் துடித்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்துபோனது மட்டுமின்றி அப்பெண்ணின் கர்ப்பப்பையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோபிநாத் – அகஸ்தியா தம்பதியினருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற அகஸ்தியாவுக்கு மார்ச் 1 ஆம் திகதி குழந்தை பிறக்கும் என திகதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், 1 ஆம் திகதி குழந்தை பிறக்கவில்லை. 3 ஆம் திகதி அகஸ்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இரவு முழுவதும் மருத்துவர்கள் பணியில் இல்லை.
செவிலியரிடம் தெரிவித்தும் அவர்களும் பணியில் மருத்துவர் இல்லை என தெரிவித்துவிட்டனர். இரவு முழுவதும் அகஸ்தியா வலியால் துடித்த நிலையில், காலையில் வந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.
ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மேலும், ஒரு மணிநேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர்.
குழந்தையின் உடலில் தொப்புள்கொடி சுற்றிக்கொண்டது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தை இறந்தது. தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தாயின் உயிரை காப்பாற்ற கர்ப்ப பையை அகற்றினோம். அதனால்தான் தாய் உயிர் பிழைத்தார் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இறந்த ஆண் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் உஷா சதாசிவன் அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு உறவினர்க வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களின் அலட்சியே இப்படி நடப்பதற்கு காரணம் என புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்கவேண்டும். உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளனர்.