தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்றிரவு, மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
அந்த வகையில் நேற்று இரவு மகாசிவராத்திரியை ஒட்டி நேற்றிரவு முதல் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு சிவராத்திரி விழா தொடங்கிஇரவு 7 மணி, இரவு 11 மணி, இரவு 1 மணி, அதிகாலை 3 மணி என நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பூஜையின்போதும் பால், தயிர், இளநீர் மூலம் சிவப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் குழந்தைகள் பெரியவர்கள் என்று வித்தியாசம் இன்றி, அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு தூங்காமல் இருந்து சிவராத்திரி விரதத்தை கடைபிடித்தனர்.