ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு நடக்கிறது.
இந்த தொடரை இந்திய அணி வென்றால், ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை இந்திய அணி தக்கவைத்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்ததன் மூலம் தரவரிசையில் 2 புள்ளியை இழந்த இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி பின்தங்கி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், ஆஸ்திரேலியாவை எளிதில் இந்திய அணி சுருட்டிவிடும் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது. இன்று நடக்கவிருக்கும் நாக்பூர் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமான மைதானம் ஆகும். அதனால் ரசிகர்கள் நல்ல விருந்து காத்திருக்கின்றது என கூறலாம்.
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. வெற்றிபெற்ற மூன்று போட்டியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்னாக இந்திய அணி 354 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் பங்குபெறும் வீரர்கள்:
இந்தியா:
ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா:
உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், கிளைன் மேக்ஸ்வெல், அலெக்ஸ் காரி, நாதன் கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், ஆடம் ஜம்பா.