இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நாக்பூரில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் நிதானமாக ஆடி 21 எடுத்தபோது மேக்ஸ்வெல் பந்தில் எல்பிடபிள்யூ மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த 120 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 40 ஆவது ஒருநாள் சதம் ஆகும்.
அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 18, விஜய்சங்கர் 46, கேதர் ஜாதவ் 11, ரவீந்திர ஜடேஜா 21, குல்தீப் யாதவ் 3, முஹம்மத் சாமி 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி ரன் ஏதும் எடுக்காமல், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.