அமுலுக்கு வந்த புதிய சட்டம்….

உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டின் குடிவரவு, குடியுரிமை மற்றும் பன்னாட்டு விவகாரங்கள் அமைச்சர் டேவிட் கோல்மேன் கூறுகையில்,

உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அவுஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. மேலும், அவர்கள் அவுஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்.

விசா நடைமுறைகளை கடுமையாக்கும் இந்த புதிய சட்டம் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம், உள்நாட்டில் சிறை தண்டனை பெற்று, ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

அவுஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பிற்காக குடியுரிமை சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்த புதிய சட்டம் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், எனினும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் கோல்மேன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளின் விசாக்களை ரத்து செய்வதன் மூலம் அவுஸ்திரேலியாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதாகவும் கோல்மேன் குறிப்பிட்டுள்ளார்.