ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு….

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக மீண்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியவிசேட தீர்ப்பின் பிரகாரம் அவர் மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தான் ஏலவே பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அவர் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், ஒரு மாத காலத்தின் பின்னர் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாணம் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மிகவும் பின்தங்கி உள்ளது என தெரிவித்து கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவரது பதவி காலத்தின்போது எம்.கே.எம். மன்சூரினை கல்விப் பணிப்பாளராக நியமித்திருந்தார்.

அதற்கு முன்னர் அந்த பதவியில் இருந்த எம்.ரி.எ. நிசாமின் நிர்வாக நடவடிக்கைகள் மந்த கதியில் இருந்தமையின் காரணமாக அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மன்சூர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

4 மாதங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றி வந்த வேளை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மாகாண கல்விப்பணிப்பாளராக எம்.ரி.எ.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் தலையீட்டினால் மன்சூர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீன்டும் நிசாம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது பதவி பறிக்கப்பட்டமை அநீதி என குறிப்பிட்டு கல்விப்பணிப்பாளர் மன்சூர் திருகோணமலை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை அமுல்படுத்தக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி நாளையிலிருந்து மன்சூர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

மன்சூர், மிகவும் ஆளுமை மிக்கவரும், ஒரு கடமையினை திறம்பட செய்து முடிப்பதுடன், அவரது கடமை காலத்தில் பல சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்தவர் எனவும் பல அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும், இவ்வாறான திறமையான அதிகாரியை பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியமைக்கான காரணம் தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஆளுநர் ஒருவர் எடுத்த முடிவிற்கு எதிராக இன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோல பல அரச அதிகாரிகளுக்கும், பல்வேறு துறைகளில் உள்ள திறமையானவர்களுக்கும் அரசியல் நடவடிக்கைகளால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அவர்களும் இதுபோல தமக்கான நீதியைக் கோரி துணிச்சலாக வழக்குத் தொடர்வார்களேயானால் அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நீதிபதி இளஞ்செழியன் நினைவூட்டியுள்ளார்.

மேலதிக தகவல்கள் – அப்துல்சலாம் யாசிம், சகாதேவராஜா.