4 ஆண்டுகளில் 7000 ஆண்கள்… இளம்பெண்ணின் சோகக்கதை!

பிரித்தானியாவிற்கு பல கனவுகளுடன் வந்த நைஜீரிய பெண், பாலியல் அடிமையிலிருந்து தப்பி தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

நைஜீரியாவை சேர்ந்த 33 வயதான சோபியாவிடம், பிரித்தானியாவில் வரவேற்பாளர் வேலை ஒன்று இருப்பதாக அவரது ஊரில் தேவாலயத்தில் பணிபுரியும் ஒருவர் கூறியுள்ளார்.

இதனை கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்த சோபியா, பிரித்தானியாவிற்கு கிளம்ப முடிவெடுத்துள்ளார். சிறிது பயம் இருந்தாலும், வாழ்க்கை நல்ல நிலைக்கு சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் கிளம்பியுள்ளார்.

இதுகுறித்து சோபியா கூறுகையில், ஹீத்ரோ விமான நிலையயத்தில் இறங்கியதும் என்னை ஒரு காரின் பின் பக்கம் அமரவைத்து அழைத்து சென்றனர். எங்கு செல்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஏதோ தவறாக எனக்கு தோன்றியது. பின்னர் ஒரு இடத்திற்கு என்னை அழைத்து சென்று அறையில் தங்குமாறு கூறினார். நானும் பயண அசதியில் உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலையில் காலடி சத்தம் அதிகமாக கேட்டது. கதவை திறந்து பார்த்தபோது தான் எனக்கு புரிந்தது. அது ஒரு விபசாரவிடுதி என்பது. அந்த நேரத்தில் வேகமாக என்னுடைய அறைக்கு வந்த ஒரு ஆண், கதவை தாழ்பாள் போட்டுவிட்டார்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆண்கள் வரை வருவார்கள். 4 ஆண்டுகளில் 7000 ஆண்கள் வரை நான் பார்த்துள்ளேன். அந்த நரக வேதனையிலிருந்து தப்ப, நான் பலமுறை முயற்சி செய்தேன். கடைக்கு சென்றுவர என்னுடன் சேர்ந்த சக 4 பெண்களை வெளியில் அனுப்புவார்கள். ஆனால் என்ன செய்கிறோம் என்பதை தொடர்ந்து கவனித்து வருவார்கள்.

இதனால் என்னால் தப்ப முடியவில்லை. அப்படி ஒருமுறை தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் கடையில் ஒரு பெண்ணை சந்தித்தேன். கையில் பணமில்லை ஒரு 50 பவுண்ட் கிடைக்குமா என அவரிடம் உதவி கேட்டதும், அவரும் கொடுத்துவிட்டார்.

உடனே கடையின் பின் வழியாக தப்பி லண்டனுக்கு சென்றேன். ஆனால் அங்கே என்ன செய்வதென எனக்கு தெரியவில்லை. எனக்கு அங்கு யாரையும் தெரியாது. சாப்பிட, தங்குவதற்கு வீடு இல்லை. தெருக்களில் பிச்சை எடுத்து, அங்கேயே உறங்க ஆரம்பித்தேன். 2 வருடங்களாக என்னுடைய வாழ்க்கை அப்படியே சென்றுவிட்டது.

அதன்பிறகு தான் எனக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தது. தற்போது நான் மகளிர் அமைப்பின் மூலம் கவனிப்பில் இருந்து வருகிறேன். கணக்காளர் பயிற்சி பெற்று வருகிறேன். அதேசமயம் பாலியல் அடிமைகளாக சிக்கியிருக்கும் பெண்களை மீட்கும் பணியிலும், அவர்களுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறேன். ஆனால் இன்று வரை யாரை பார்த்தாலும் எனக்கு ஒரு நல்ல நம்பிக்கை வர மறுக்கின்றது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரித்தானியாவின் தேசிய குற்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாலியல் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட 1931 பேரில் பெண்கள் மட்டும் 1,726 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.