சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பேசிய மர்மநபர் ஒருவர் “போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து போயஸ் தோட்டம் விரைந்த போலீஸார், அங்கு சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அந்த தொலைப்பேசி மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தொலைப்பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை, சென்னை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.