இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லி திரும்பி தனது பணிகளை கவனிப்பார் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவைவிட்டு வெளியேறினார்.
தாக்குதலை தொடர்ந்து அவரை பாகிஸ்தான் அரசு இரகசிய ஆலோசனைக்கு அழைத்ததாக கூறப்பட்டது. மறுநாள் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாரியாவையும் பதிலுக்கு இந்திய அரசு ஆலோசனைக்காக அழைத்தது.
இந்நிலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தவாறு வருகிற மார்ச் 14 ஆம் தேதி இருநாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கும் கர்தார்பூர் சாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படவில்லை என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனை முடிந்துவிட்டதால் பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லி திரும்பி தனது பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.