இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், ஷிகர் தவான் நிதானமாக ஆடி 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி தான் சந்தித்த 120 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 40 ஆவது ஒருநாள் சதம் ஆகும்.
அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 18, விஜய்சங்கர் 46, கேதர் ஜாதவ் 11, ரவீந்திர ஜடேஜா 21, குல்தீப் யாதவ் 3, முஹம்மத் சாமி 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தோனி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.
இந்தநிலையில் இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் நிதானமாக ஆடினர். இந்திய அணியின் திறமையான பந்துவீச்சால் துவக்க வீரர்களான பின்ச் 53 பந்துகளில் 37 ரன்களும், உஸ்மான் கவ்ஜா 57 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனையடுத்து களமிறங்கிய பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 59 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி அவுட் ஆகினார். அந்த அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 65 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்தடுத்து வந்த மட்டையாளர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 பந்துக்களுக்கு 11 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. விஜய் சங்கரின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய அணி 49 .3 ஓவரில் அனைதுவிக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, விஜய் சங்கர் தலா இரண்டு விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், ஜடேஜா – கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.