எளிமையான வழியில் உடல்சூட்டை குறைக்க!

பொதுவாக கோடை காலம் ஆரமித்தவுடன் நாம் உடல் சூட்டை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள்வது உண்டு. அடிக்கடி குளிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், நாம் அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. உடலில் வியர்வை இருக்கும் பொழுது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. இது உடல் உபாதைகளுக்கு வழிவழிக்கும். மேலும், தோல் நோய்கள் உருவாகவும் காரணமாக அமையும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை:

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

வெண்ணெய் மற்றும் பால், மோர்:

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

கற்றாழை ஜூஸ்:

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

புதினா டீ:

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.

சோம்பு நீர்:

ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

இளநீர்:

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே கோடையில் தவறாமல் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கரும்பு ஜூஸ்:

கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும்.

முள்ளங்கி:

பலருக்கும் முள்ளங்கி பிடிக்காது. இதற்கு அதன் சுவையே காரணம். ஆனால் இந்த காய்கறியை கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடையில் வெப்ப பக்கவாதம் வருவது பொதுவானது. இதற்கு காரணம் அதிகப்படியான உடல் சூடு மற்றும் உடல் வறட்சி தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி முள்ளங்கியை கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்:

கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் காய்கறி தான் வெள்ளரிக்காய். இது மிகவும் சுவையாகவும், நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதோடு, கோடையில் இதை சாப்பிட்டால், உடல் வறட்சி தடு, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரிக்காயை சாலட் போன்று செய்து, அடிக்கடி சாப்பிடுங்கள்.

முலாம் பழம்:

கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.