முருகன் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலை திகதி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியான புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன ர் .

இவர்களது விடுதலை குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூற முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா இவர்களை விடுவிக்க முடிவு செய்திருந்தார்.

அத்துடன், இது குறித்த அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தார். எனினும், மத்திய அரசு இவர்களது விடுதலைக்கு தடையாகவே இருந்த வந்தது.

எனினும், குறித்த ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசு முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து குறித்த ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், அதற்கும் இதுவரையில் முடிவு கிடைத்ததாக இல்லை. இந்த நிலையில்தான் எதிர்வரும் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் குறித்து சட்டத்தரணி புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில், “எதிர்வரும் 10ம் திகதிக்குள் அவர்கள் அனைவரையும் விடுவிப்பார்கள் என்று முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவல் மத்தியிலிருந்து வந்த தகவல் என்று நம்மிடம் கூறியவர் இப்போதைக்கு இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. மிக முக்கியமான நபரிடம் இருந்து வந்த தகவல் இது என்பதால் இதற்கு மேல் உள்ள தகவல்களை கூற இயலவில்லை எனத் தெரிவித்தார்.

7 பேரையும் விடுவிக்க கோரி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக இருந்தோம். இந்த நிலையில் மிக முக்கியமான நபரிடம் இருந்து 7 பேரும் வரும் 10 ம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது அதனால் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம்” என கூறியுள்ளார்.