எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….

அமெரிக்க ஜனாதிபதியுடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா தனது முக்கிய ராக்கெட் ஏவுதளத்தை புனரமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை வடகொரியா முழுமையாக நிறுத்தியது. அத்துடன் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று முக்கிய அணு ஆயுத உலைகள், ஏவுகணை தளங்கள் உள்ளிட்டவற்றை சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் வடகொரியா கைவிட்டது.

இருப்பினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஆனால் தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைத்துள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்தாலோசிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இரு தரப்பினர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா இனி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அணு ஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என தெரிவித்தது.

அதே சமயம் வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரை அந்நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், அழிக்கப்படும் என வடகொரியா உறுதி அளித்திருந்த முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ராக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை வடகொரியாவின் செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.

கடந்த காலங்களில் இந்த ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலன்களை கொண்டு செல்லும் ராக்கெட்டுகள் மட்டுமே ஏவப்பட்டுள்ளன.

எனினும் வடகொரியா இங்கு மறைமுகமாக ஏவுகணை சோதனைகளை நடத்துவதாக சர்வதேச சமூகம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.