இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கொலை மற்றும் கற்பழிப்பு குற்றத்தில் கைதாகி 16 ஆண்டுகளாக சிறையில் இருந்த 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் நாசிக்கில் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கும்பல் ஒன்று அங்கிருந்த 5 பேரை கொலை செய்துவிட்டு பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் 2 பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் நாடோடி இனத்தை சேர்ந்த ஆங்குஷ் மாருதி ஷிண்டே, ராஜ்யா அப்பா ஷிண்டே, அம்பாதாஸ் லஷ்மண் ஷிண்டே, ராஜுமாசு ஷிண்டே, பாபுஅப்பா ஷிண்டே மற்றும் சூர்யா என்ற சுரேஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் மாவட்ட நீதிமன்றம் அவர்கள் 6 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. உயர் நீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தது.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு தண்டனையை உறுதிசெய்தது.
இந்த நிலையில் குறித்த 6 பேரும் 16 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் 6 பேரும் அப்பாவிகள், அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் வாதாடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது. மட்டுமின்றி குறித்த 6 பேரும், பொலிசாரால் ஜோடிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல. அப்பாவிகள். ஆனால் குற்றத்தை 4 பேர் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் யார் என பொலிசார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே மறுபடியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி 6 பேரையும் உடனடியாக விடுவிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் மராட்டிய அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.