திமுக தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் 17 வது மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம், கடந்த மாதம் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 7 ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.
வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படிருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான தேதி, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனு தாக்கல் செய்வற்கான அவகாசம், மார்ச் தேதி 7ம் தேதியில் இருந்து 8 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ஜெகத்ரட்சகனும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல் வடசென்னை தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும் விருப்பமனு தாக்கல் செய்தனர்.