வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்ட மூதாட்டி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவின்போது, கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டித்தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று, கொதிக்கும் நெய்யில் வெறும் கையினால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டின் மகா சிவராத்திரியான கடந்த 4ம் தேதி நள்ளிரவு 11:30 மணிக்கு, கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், இருளப்பன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அப்போது, விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட, 87 வயது மூதாட்டியான முத்தம்மாள் என்பவர் வெறும் கையால் அப்பம் சுட்டு எடுத்தார். இதன்போது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டு வணங்கினர்.

அதிகாலையில், அப்பங்கள் அனைத்தும் அம்மனுக்கு படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், தேனி, மதுரை, விருதுநகர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மகா சிவராத்திரியில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைக்கும் வழிபாட்டில், மூதாட்டி முத்தம்மாள் கடந்த 48 ஆண்டுகளாக வெறும் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து வருகிறார். இதற்காக அவர் 40 நாட்கள் விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.