கல்லூரிக்குச் சென்ற பேராசிரியை திடீர்மரணம்!

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள வேலூர் பகுதியில் வசித்து வருபவர் ஜான் அலெக்சாண்டர். இவரது மகள் திவ்யா சில்வஸ்டர். இவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு திவ்யாவிற்கும், வெள்ளிகோடு புதுவிளைபகுதியில் வசித்து வந்த பெல்லாமினிற்கும் திருமணம் நடைபெற்றது. அவரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனத்தை நிறுத்திய திவ்யா அப்பகுதியில் உள்ளவர்களிடம் எனக்கு மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் திவ்யாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு திவ்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் திவ்யா விஷம் உண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திவ்யாவின் தந்தை திவ்யாவின் கணவர் பெல்லார்மின் மற்றும் அவரது தந்தை தாயார் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் திவ்யா வீட்டில் வளர்க்கும் நாய் உப்புமாவை சாப்பிட்டுவிட்டு இறந்து கிடந்துள்ளது. திவ்யாவும் அதனை சாப்பிட்டு சென்றதால் அதில் விஷம் கலந்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து பெல்லார்மினிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவர் தனது மனைவி சாப்பிட்ட உப்புமாவில் தான் விஷம் கலந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.