காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 44 பேர் பலியானர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து இதுவரை வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்திய விமானங்கள் போட்ட குண்டுகள் மரங்கள் மீதும் தரையிலும் விழுந்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
மேலும், இந்தியா நடத்திய தாக்குதலில் இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என சில சர்வதேச ஊடகங்களும் தெரிவித்திருந்தன. மேலும், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலக்குகள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகளும் அரசை வலியுறுத்திவந்தது.
இந்நிலையில், 80 சதவிகித இலக்குகளை வெற்றிகரமாக தகர்த்ததற்கான ஆதார படங்களை மத்திய அரசிடம் விமானப் படை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.