புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக தற்போதைய ஆய்வுகள் கூறி வருகிறது. அப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காஜா புயல் தாக்கி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது குடிநீருக்கு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி, ரசியமங்கலம், கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கும் 1000 முதல் ஆயிரத்து 100 அடி வரை ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிக குறைந்து 500 அடி வரை ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வந்த விவசயிகளுக்கு ஒரு சொட்டு கூட நீர்வாராமல் விவசாயம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கொத்தமங்கலம் கிழக்கு சங்கரன் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் தனி ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு மத்திய அரசு நிதியில் இருந்து ஆழ்குழாய் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பல்வேறு நிலத்தடி நீர் சோதனைகளுக்கு பிறகு அப்பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கியது. 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொத்தமங்கலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் ஆழ்குழாய் மூலம் தான் விவசாயம் நடக்கிறது. தற்போது ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்தால் தான் தண்ணீர் என்ற நிலை உள்ளது. ஆனால் குடிதண்ணீருக்காக மத்திய அரசு சார்பில், வல்லுனர்களை கொண்டு நீர் ஊற்று பார்த்த பிறகு ஆழ்குழாய் அமைக்கப்பட்டதில் தண்ணீர் வரவில்லை.
கோடைகாலம் ஆரம்பிக்கும்போதே இந்த நிலைமை உள்ளது. மேலும் மக்கள் வரும் காலங்களை எவ்வாறு சமாளிக்க போகின்றனர் எந்த சந்தேகம் எழுகின்றது.