தெருவில் பிச்சையெடுத்து கோடீஸ்வரரான யாசகர்!

வருடங்களாக தொடருந்துகளில் யாசகம்பெற்று மூன்று வீடுகளைக் கட்டிய கண்பார்வையற்ற யாசகர் ஒருவர் குறித்த செய்தி தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது..

கம்பஹாவைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த யாசகர் மாத வருமானமாக ஒன்றரை லட்சத்துக்கும் மேலாக சம்பாதித்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

முன்னதாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் வைத்து குறித்த யாசகர் தொடருந்துக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். பொது இடங்களில் பிச்சை எடுக்கக்கூடாது என்று தெரிவித்தே இந்த கைது இடம்பெற்றது.அங்கு அவரிடம் காவலர்கள் விசாரணையினை மேற்கொண்டபோது, அதிர்ச்சியான தகவல்கள் அவர்மூலமாக வெளிவந்துள்ளன.

கடந்த 25 வருடகாலமாக கொழும்பு-கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கிடையில், தான் யாசகம் பெற்றுவருவதாகவும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபா வரையிலும் சம்பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், இந்த வருமானத்தைக்கொண்டு மூன்று வீடுகள் கட்டியுள்ளதுடன், அவற்றில் இரண்டினை மகள்மாருக்கு சீதனமாக எழுதிக்கொடுத்துவிட்டு மற்றொரு வீட்டில் தான் வசித்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை அவரது வங்கிக் கணக்கில் ஐந்து லட்சம் ருபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், யாசகம் பெறுவதற்காக தினமும் முச்சக்கரவண்டியிலேயே தொடருந்து நிலையங்களுக்கு வந்து செல்வதாகவும் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் அதிர்ச்சிமாறாத கண்களோடு கேட்டுக்கொண்டிருந்த தொடருந்து அதிகாரிகள், அவரை அழைத்துச் செல்வதற்காக அவரது மகள் ஒருவரை வருமாறு அழைத்துள்ளனர்.அதன்படி அவரது மகள் மகிழுந்து ஒன்றில் வந்து இறங்கியதுடன், அவருடன் அவரது தந்தையாரான குறித்த யாசகர் திருப்பியனுப்ப்பப்பட்டார்.

தனக்கு கண்பார்வை தெரியாமல் போனமையானது, தான் வாழ்வில் பெற்ற பெரும் ஆசீர்வாதமாகவே அமைந்துள்ளதாக அந்த யாசகர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.