இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனா தேவி (44). கணவரை இழந்த இவர் தனது மகன் பர்மோத் (23) உடன் வசித்து வந்தார்.
ஜிம் பயிற்சியாளராக வேலை செய்து வந்த பர்மோத் கடந்த மாதம் 19ம் திகதி தனது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இது குறித்து பொலிசில் புகார் அளித்த மீனா தேவி, தான் வீட்டின் வேறு அறையில் தூங்கி கொண்டிருந்த போது யாரோ என் மகன் பர்மோத்தை கொலை செய்துள்ளனர்.
காலையில் எழுந்த பின்னர் தான் என் மகன் இறந்துகிடந்ததை பார்த்தேன் என கூறினார்.
இது தொடர்பாக பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மீனா தேவி தனது ரகசிய காதலன் பிரதீப் (23) உடன் சேர்ந்து பர்மோத்தை கொன்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், பர்மோத்துடன், பிரதீப் ஜிம்மில் உடன் பணிபுரிந்த நிலையில் இருவரும் நட்பானார்கள்.
இதையடுத்து பர்மோத் வீட்டுக்கு அடிக்கடி பிரதீப் வர தொடங்கிய போது அவர் தாய் மீனா தேவியுடன் பிரதீப்புக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதை பர்மோத் கண்டுப்பிடித்த நிலையில் தாயை கண்டித்ததுடன், பிரதீப்பை இனி தனது வீட்டுக்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.
இதையடுத்து தனது தொடர்புக்கு தடையாக இருக்கும் மகனை கொல்ல மீனா தேவி முடிவெடுத்தார்.
இது குறித்து பிரதீப்பிடம் அவர் தெரிவித்தார். அதன்படி சம்பவத்தன்று பிரதீப் தனது நண்பர்களான சவுரவ், மோனு ஆகியோருடன் பர்மோத் வீட்டுக்கு வந்து அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.
பின்னர் மகனை யாரோ கொன்றுவிட்டதாக பொலிசில் மீனா தேவி நாடகமாடியதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் வாகன சோதனையின் போது சவுரவ் துப்பாக்கியுடன் பொலிசில் மாட்டினார், துப்பாக்கியை ஏன் அவர் வைத்துள்ளார் என பொலிசார் விசாரித்த நிலையிலேயே அனைத்து உண்மைகளும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மீனா தேவி, பிரதீப் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.