தென்னிந்திய திரைப்படத்துறையில் ஈழத்தமிழ் பெண்!

மானுடராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவமான பல திறமைகள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன.

சரியான வாய்ப்புக்கள் இல்லாததன் காரணத்தினால் பலர் இலைமறை காய்களாக இருக்கின்றனர் அதே சமயம் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டதால் பல்வேறு துறைகளிலும் சிகரம் தொட்ட பலரும் இன்றும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படி ஒருவர்தான் ஈழத் திருநாட்டின் தமிழர் தலைநகரம் என்று சொல்லப்படும் திருகோணமலையை சேர்ந்த மதுமதி.

இன்று தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பினை பயன்படுத்தி தென்னிந்திய திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமாகின்றார்.

திருகோணமலையைச் சேர்ந்த மதுமதி, கொழும்பில் தனது உயர்தரக் கற்கைகளை கற்றுக்கொண்டிருந்த சமயத்தில் கிடைத்த ஊடக வாய்ப்பு ஒன்றின் மூலம் ஊடகத்துறைக்குள் பிரவேசித்தார்.

தனது அதீத ஆற்றலால் கிடைக்கப்பெற்ற வாய்ப்பின் மூலம் யார் இவர் என்ற குறுந்திரைப்படம் ஒன்றில் நடித்ததுடன், தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி உச்சம் தொட்டவர்.

இன்று இந்த குறுந்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

தற்போது இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருவதுடன், விரைவில் அந்த இரண்டு படங்களும் திரைக்கு வரவுள்ளதாக தனியார் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பெண்ணாய் பிறந்த எவருக்கும் பயம் இருக்கக் கூடாது, விடாமுயற்சியுடன் வாழ வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்