சென்னை பொன்னேரி அருகே மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு பள்ளி கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைக்கு பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான முத்தரசி (வயது 6) நேற்று முன்தினம் காலை திடீரென பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தாள்.
அவள் தனது பள்ளி மிகவும் சேதமடைந்து இருப்பதாக புகார் மனுவை ஆர்.டி.ஓ. நந்தகுமாரிடம் கொடுத்திருக்கிறார்.
6வயது குழந்தை தாமாக வந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ. நந்தகுமார் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார்.
இது குறித்து மாணவி கொடுத்த புகார் மனுவில்,
“எங்கள் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் பழுதடைந்து உள்ளது.
தரை பகுதியும் பெயர்ந்து இருக்கிறது. இதனால் மாணவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாய் உடைந்துமோசமான நிலையில் காணப்படுகிறது.
மேலும் பள்ளியின் பின்பக்க பகுதி மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.