சி.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் பாகுபாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.சி., 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெற்ற இயற்பியல் பாடப்பிரிவு வினாத்தாள் இதுவரை இல்லாத அளவிற்கு கடினமாக இருந்ததாகவும், தேர்ச்சி பெறுவதே கடினம் என்றும் தேர்வு எழுதிய மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
பாடத்திட்டத்திற்கு உள்ளிருந்துதான் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாக தேர்வு வாரியம் சொல்லலாம்.
இருப்பினும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இந்தாண்டு இல்லை.சென்னை மண்டலத்திற்கு உட்பட்டு வந்துள்ள வினாத்தாள் கடினமாகவும், அகமதாபாத் மண்டல வினாத்தாள் எளிதாகவும் இருந்துள்ளது. தேர்வு வினாத்தாளில் இவ்வளவு ஏன் பாரபட்சம்? என தெரியவில்லை.
மாதிரி வினாத்தாளுக்கும், தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனால் சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் என இயற்பியல் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுவரை வழக்கத்தில் இல்லாத நடைமுறை என்று குறிப்பிட்டனர். பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் தேர்வுகள் என்றாலே அதிகமன அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்ற செயல்களால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும்.
எதிர்காலத்தில்இதுபோன்ற வினாத்தாள்களை தவிர்க்க வேண்டும்.கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலையில் மதிப்பெண்ணை சமப்படுத்தும் நோக்கில் கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே தற்போதைய சூழலையும் மாடரேட் குழு மூலம் மதிப்பெண் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்
இதன்மூலம் எஞ்சியுள்ள தேர்வுகளை மாணவர்கள் அச்சமில்லாமல் உற்சாகத்துடன் எழுதுவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.