மாட்டுப்பண்ணையில் அரங்கேறிய சோகம்.!

கோவை கவுண்டம்பாளையம் அருகே பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சரவணன் நகரில் மாட்டுப்பண்ணை வைத்திருப்பவர்கள் சிவராமசந்திரன் மற்றும் அமுல் தம்பதியினர்.இந்நிலையில் காலை பண்ணையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அப்போது,அமுல் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சிலமணி நேரமேயான தொப்புள் கொடி கூடசரியாக அறுக்கப்படாமல் ரத்தத்துடன் பெண் குழந்தை ஒன்று மண்ணில் வீசப்பட்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுல் தனது கணவனை வரவழைத்தார்.

இதையடுத்து, தம்பதியினர் உடனே அவசர உதவி எண்ணான 100-க்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், குழந்தையை பெற்றுக்கொண்டு துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தைகள் நல மருத்துவ குழுவினர், தொப்புள் கொடியை அறுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி மூலம் குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து சிலமணி நேரமேயான பெண் குழந்தையினை மாட்டுப்பண்ணையில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.