தற்போது நிலவும் அதிதீவிர வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் அதிகளவான வெப்ப நிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமகாலத்தில் 45 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழமையை விடவும் கடும் வெப்பநிலை காரணமாக பலர் வீதிகளில் மயங்கி விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு மக்கள் சரும நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகளில் இருப்போர், வாகனங்களில் பயணிப்போர் ஓரளவு தப்பிக்கின்ற போதிலும், வீதியால் நடந்து செல்வோர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையை அடுத்து, வெயில் நிலவும் போது வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.