ஹம்பாந்தோட்டையில் குள்ள மனிதர்கள்!

ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் இருப்பவர்கள் மர்மமான விலங்கொன்று தொடர்பான அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குள்ள மனிதர்களை போன்ற சந்தேகத்திற்கு இடமான இந்த விலங்கினத்தை வலஸ்முல்ல தெஹிகஹனே பிரதேசத்தில் உள்ள விதபொல கிராம மக்கள் 5 பேர் நேரில் கண்டுள்ளனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த யுவதி நேற்றிரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தாங்கியில் இந்த விலங்கினை பார்த்துள்ளார். இதனை பார்த்து யுவதி சத்தமிட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த யுவதியின் தாயும் அந்த விலங்கினை பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த விலங்கு ஓடிச் சென்று காட்டில் மறைந்துக்கொண்டதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குள்ள மனிதர்கள் என கிராம மக்கள் கூறும் அந்த விலங்கினம் காட்டில் ஓடிச் சென்ற பாத சுவடுகள் புற்தரையில் பதிந்து காணப்படுகின்றன.

இதனிடையே அந்த வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் தேடுதல் நடத்தியுள்ளனர். அவர்களும் அந்த விலங்கினை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் குள்ள மனிதர்கள் என மக்கள் கூறும் விலங்கினம் வாழ்வதற்கான அறிவியல் பூர்வமான உண்மையான சாட்சியங்கள் கிடைக்கவில்லை.

குள்ள மனிதர்கள் தொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதால், சமூகத்தில் அது தொடர்பாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் குள்ள மனிதர்கள் என்ற ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அந்த மனிதர்கள் வேடுவர்களுக்கு தொல்லையாக அமைந்ததால், கற்குகை ஒன்றுக்குள் போட்டு இனப்படுகொலை செய்யப்பட்டதாக மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.

குள்ள மனிதர்கள் எனக் கூறப்படும் இந்த உயிரினம் இலங்கையின் அடர்ந்த காடுகளில் இன்னும் இருப்பதாகவும் அவை பெரிய மரங்களின் உச்சியிலும் கற்குகைகளிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.