விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் வாங்கிய கடனை கட்டவில்லை என்று வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. மழவராயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் விழுப்புரம் மஹேந்திரா பைனான்ஸ் நிறுவனத்தில் முன் பணமாக ஒரு லட்சம் கட்டி விவசாயக் கடனாக ரூ.6.50 லட்சம் மதிப்பில் டிராக்டர் ஒன்றை கடந்த 9 மாதத்திற்கு முன்பு வாங்கினார்.
கடந்த 9 மாதங்களாக சரியாக வட்டி, மற்றும் தவணைத் தொகையை கட்டி வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மாதத்திற்கான தவணைத் தொகை 5ஆம் தேதி கட்ட வேண்டும்.
பணத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு மகேந்திரா பைனான்சின் மேலாளர் மற்றும் அதிகாரிகள் விவசாயி பாலாஜி வீட்டிற்கு வந்து தவணைத்தொகை கட்டாததால் டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது பாலாஜியும், அவரது குடும்பத்தினரும் அவர்களிடம் கெஞ்சியும் அதனை பொருட்படுத்தாமல் டிராக்டரை எடுத்துச் சென்றனர்.
அப்போது பாலாஜியின் சித்தப்பா பாபு “பாலாஜி கட்டவில்லையென்றால் நான் கட்டி விடுகிறேன்” என்று உறுதியளித்துள்ளார். அதன்பின் பைனான்ஸ் அதிகாரிகள் டிராக்டரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் ஊர்க்காரர்கள் மத்தியில் நடந்ததால் அவமானம் தாங்க முடியாமல் பாலாஜி வீட்டிற்குள் சென்று பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். மரணமடைந்த விவசாயி பாலாஜிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.தனியார் வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் விவசாயிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதால் அவமானம் தாங்க முடியாமல் மருந்து குடித்து பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோடு உயிரிழந்த விவசாயி பாலாஜியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.