ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கத்தில் தன்னுடைய மகள் சேர்ந்தது தவறுதான். அவளை மன்னித்து பிரித்தானியாவிற்குள் அனுமதியுங்கள் என ஷமீமாவின் தந்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த ஷமீமா 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய 15 வயதில், சக மாணவிகள் 2 பேருடன் சிரியாவிற்கு தப்பி சென்று அங்கு பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.
பிரித்தானியாவிற்கு வர விருப்பம் தெரிவித்து கடந்த மாத ஆரம்பத்தில் நிறைமாத கர்ப்பிணியாக ஷமீமா கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் அவருடைய குடியுரிமையை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
நெதர்லாந்து பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக அவருடைய கணவர், யாகோ ரிட்ஜ் 6 வருடங்கள் சிறை தண்டனை பெற்றிருப்பதால், குழந்தையுடன் தனியாக இருந்த ஷமீமா, மற்ற ஐஎஸ் பயங்கரவாதிகளின் மனைவிகளால் தனக்கு முகாமில் கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வடக்கு சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த ஷமீமாவின் 18 நாட்களான மகனுக்கு சில நாட்களாகவே நிமோனியா நோய் தாக்குதல் இருந்துள்ளது. நேற்று ஜெரா உயிரிழந்ததை அடுத்து, உள்துறை செயலாளருக்கு கடும் கண்டனங்கள் பல பக்கங்களில் இருந்தும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஷமீமாவின் தந்தை அஹ்மத் அலி (60), அவள் தவறு செய்துவிட்டாள், நான் அவளுடைய தந்தையாக, பிரித்தானிய மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
ஷமிமாவின் செயல்களுக்கு நான் வருந்துகிறேன். பிரித்தானிய மக்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து அவளை மன்னித்து விடுங்கள்.
அந்த நேரத்தில் அவள் குறைந்த வயதில் இருந்தாள். அவளால் அதனை புரிந்துகொள்ள முடியவில்லை. யாரேனும் அவளை மயக்கி அதனை செய்ய வைத்திருக்கலாம். அவள் அதை உணராமல் தவறு செய்திருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன் என, மகளை மீண்டும் பிரித்தானியாவிற்குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.