சவுதிக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று, 18 வருடங்கள் அடிமையாக அடைத்து வைக்கப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சிப் பெண், உயிரிழந்துள்ளார். கடந்த மாதமே இவர் கிளிநொச்சியை வந்தடைந்தார்.
எஜமானர்களின் கொடுமையால், ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்து விட்டதாக அவர் பிணவறைக்கு அனுப்பப்பட்டு, கடைசிநேரத்தில் காப்பாற்றப்பட்டிருந்தார். எனினும், கிளிநொச்சியில் சிகிச்சை பலனின்றி அன்மையில் உயிரிழந்தார்.
கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளையின் தாய் இரவிச்சந்திரன் சிறிஞானேஸ்வரி. வீட்டு வறுமை காரணமாக சவுதி நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
அவரது எஜமான் பெரும் கொடுமைக்காரனாக இருந்துள்ளான். 17 வருடமாக கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்று கட்டப்பாடு விதித்துள்ளான்.
சவுதியில் பல துன்பங்கள் அனுபவித்து, வயிறு மற்றும் முதுகுப் பகுதிகள் பெரிய சத்திர சிகிசைகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு கால் பாதங்களிலும் ஆணியால் குத்தப்பட்ட பெரிய காயங்களும் உள்ளன. ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் இறந்து விட்டார் என கூறி, இறந்த உடல்கள் வைக்கப்படும் இடத்தில் அவர் போடப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தாதியர்கள், கிளிநொச்சி பெண்ணின் முனகலை அவதானித்து, வைத்தியரிடம் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, உயிர்பிழைத்துள்ளார்.
பின்னர் சவுதி நாட்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தி இலங்கைக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு இலங்கை அனுப்பி வைத்துள்ளார்கள்.
சவுதியிலிருந்த கடைசி வருடத்திலேயே குடும்பத்துடன் தொடர்பு கிடைத்தது.
மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தபோது, விமானத்தில் இவரது பொருட்களையும் களவாடப்பட்டு, வெறுங்கையோடு இலங்கை வந்தடைந்தார்.
சவுதியில் பணியாற்றியபோது, அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவு எதுவும் கொடுக்கப்படவில்லை.
18 வருடத்தின் பின் பிள்ளைகள், கணவரை கடந்த மாதமே கண்டார்.
எனினும், அந்த குடும்பத்தின் நிம்மதி நீடிக்கவில்லை. இரண்டு கால் பாதத்திலும் உள்ள ஆணிக்காயம் மோசமாகி, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது கணவன் வாய் பேச முடியாதவர். குடும்பம் மிக வறுமையான நிலையில், இறந்த பெண்ணின் உடலத்திற்கு மாற்றுடை அணிவிக்கவே சிரமமான நிலையில் உள்ளது.
கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரின் உதவியினால், கிளிநொச்சி நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஊடாக சவப்பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு 28,000 ரூபாய் தேவை என்று கூறப்பட்டபோதும், குடும்பநிலையை கருத்தில் கொண்டு, இலவசமாக வைத்தியர்கள் அதை செய்து கொடுத்துள்ளனர்.