பாராளுமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி, முக்கிய கட்சிகளுடன் இணைந்ததில் பெருமளவு கூட்டணிகள் இறுதி நிலைக்கு வந்து விட்டது.
இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என உறுதி செய்யப்படும் என தெரிகிறது. இந்நிலையில், தேமுதிக கூட்டணி மட்டும் இழுபறியில் இருந்து அதிமுகவுடன் உறுதியாகியுள்ளது.
ஆனால், முடிவாகியதாக தோன்றிய திமுக கட்சியில் தற்பொழுது கூட்டணி குழப்பங்கள் தலை தூக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கு வழங்கப்படும் என அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இணையதளங்களில் பரிவேந்தரை வேட்பாளராக முன்னிலைப்படுத்தி பிரச்சாரத்தையே துவங்கி விட்டனர்.
மேலும், அத்தொகுதியே பரிவேந்தருக்கும் விருப்பமான தொகுதியாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு பெரம்பலூர் தொகுதியை தள்ளிவிட திமுக முயல்வதாக தெரிகிரது. அங்கு தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவு தான் என பாரிவேந்தர் அஞ்சுவதாக தெரிகிறது.
இந்நிலையில், பொன்முடியின் வாரிசான கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட்டினை உதயநிதி பெற்று தருவதாக உறுதியளித்துள்ளதாகவும், இதனால், பாரிவேந்தர் திமுக கூட்டணியை விட்டு விலக எத்தனிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதனால், திமுக கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு என்பதை உடனடியாக முடிவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும் என தோன்றுகிறது.
கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் திமுகவில் இந்த கூட்டணி குழப்பங்கள் நீடிப்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மன உளைச்சலை தரும் விதமாக அமைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.