பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவாளர்கள் அனைவரும் பசுத்தோல் போர்த்திய புலி?

இணையதள இளைஞர்கள் முதல், தெருமுனை திண்ணை வரை இன்று முகநூல் வலைத்தளத்தை பயன்படுத்தி பெண்களை கவர்ந்து அழைத்து வந்து திட்டமிட்டு பாலியல் தொந்திரவு கொடுத்து, ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வியாபாரமாக்கியதாக தற்பொழுது ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தின் 24 ம் தேதியே இந்த பிரச்சனையானது வெளிவந்தது. ஆனால் அந்த சமயத்தில் கட்சிகளின் கூட்டணி குறித்த பிரச்சனை நிலவியதால்., எந்த விதமான தாக்கமும் இன்றி இந்த பிரச்சனை பற்றிய ஆர்வம் குறைய துவங்கியது. பின்னர் விசாரணை அறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி மக்கள் அனைவரையும் சென்றடைந்தது.

இந்த பிரச்சனை வெளியான நாளில் இருந்தே காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதாவது பிப் 26 ம் தேதியே 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தை கூறி திருநாவுக்கரசு அழைத்து வந்ததும்., அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. அந்த சமயத்தில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருக்க., அவனது நண்பரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை வெளியானது.

அந்த நேரத்தில் அரசியல் தரப்பிலும் சரி இன்று இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவிக்கும் பலரும் அன்று இந்த செய்தியை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். இன்று அதே பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்க்காக மையப்படுத்தி இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்ற போர்வையால் பலர் ஆதாயத்தை தேடுகின்றனர் என்பதே கசப்பான உண்மை.

இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் பல தமிழத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது. அதை ஒரு சாதாரண வழக்காகவே இது கருதப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி விட்டும், சில சமயம் தப்பிக்க விட்டும் இது போன்ற சம்பவங்களை முடித்துள்ளனர். இது நாம் அனைவரும் அறிந்ததே.

செய்தியாக வெளியிட்டு அதன் தாக்கம் மக்களிடையே ஏற்படவில்லை என உணர்ந்தவர்கள், அந்த பெண்ணின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் வீடியோ வெளியிடவும் துணிந்து விட்டனர். இது போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாளர்களை போல காட்டிக்கொண்ட பலர் அந்த பெண்களின் புகைப்படத்தை வெளியிடுவது ஆதரவா இல்லை அரசியலா? இதனால் என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? குற்றவாளிகளை தான் வெளிக்காட்ட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிடுவது தான் அவர்களுக்கு நன்மை செய்யும் செயலா?

உண்மையில் அந்த பெண்களின் வாழ்க்கையை நீங்கள் பாதுகாக்க நினைத்தால் அவர்களது புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்வதை விட்டுவிட்டு உங்களை சுத்தியுள்ள பெண்களின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் சட்டம் குற்றவாளிகளை பார்த்துக்கொள்ளும்.